Friday, December 27, 2019

வான்சிறப்பு


வான்சிறப்பு

மழையினது சிறப்பைக் கூறுவது.

1.  வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
     தான்அமிழ்தம் என்றுஉணரல் பாற்று.

மழையானது நிலையாக நின்று பொழிந்துவர, அதனால் உலகின் உயிர்கள் நிலைபெற்று வருவதனாலேயே அம்மழையானது அமிழ்து என்று உணருவ தற்குரிய பான்மையைக் கொண்டிருக்கிறது.

அமிழ்+துஎன்ற இரு சொற்களால் அமைந்த வினைத்தொகை நிலைத் தொடர் அமிழ்து ஆகும்.

அமிழ் - அமிழ்கின்றது -உணவு, மேனின்றமிழ்கின்ற உணவு.

மழையே அமிழ்தாயின் ஈண்டு அமிழ்து என்னும் சொல்லால் குறிப் பிடுவதில் சிறப்பென்னவெனில், வெப்பமானது முகக்கும் நிலையில் அந்நீர் முகில் என்றும், அம்முகில், நீரைக் கொண்டு நின்ற நிலையில் அந்நீர் கொண்டல் என்றும், அக் கொண்டல் மேற்சென்ற நிலையில், அந்நீர் வான் என்றும், அவ்வான் கருமையுற்ற நிலையில் அந்நீர் கார் என்றும், அக்கார் மழைக்கும் நிலையில் அந்நீர் மழை என்றும், அம்மழைதான் வாழ்வார்ககு அமிழும் உணவாகி அமிழ்ந்து வரும் நிலையில் அமிழ்து என்றும், அவ்வமிழ்து நிலத்தை மருவும் நிலையில் மாரி என்றும் மற்றும் பற்பல நிலைகளில் அந்நீர் பற்பல பெயர் பெறினும் அவற்றில் அமிழ்து என்று கூறப்படும் நிலையே சிறப்பாதல் அறிக.

மழை பெய்கின்றது, உயிர்கள் வாழ்கின்றன என்பதை - கேள்விக்கு இடமில்லாமல் அறிவுக்கும் பொருத்தமாகத் திருவள்ளுவர் சொல்லத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்.

மக்கள் உயிர் வாழ்க்கைக்கு மழை மிக்கப் பயன்பட்டு வருகின்றது என்பதுதான் வள்ளுவர் கருத்து.

2.  துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
     துப்புஆய தூஉம் மழை.

உண்பார்க்கெல்லாம் உயிர்த்துணையாகிய சோறு, கறி முதலிய உணவு களை உண்டாக்கி, அவ்வுண்ணுதலையுடைய உலகுக்கு, தானே உண்ணு நீர் ஆகியும் உதவுவது மழையாம்.

சோறு முதலியவைகளை ஆக்கினால் மட்டும் அமையாது. உண்ணு நீரும் இன்றியமையாதது என்பார் துப்பாய தூஉம் மழை என்றார்.

3.  விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
     உண்இன்று உடற்றும் பசி.

மழையானது மிகுதியாக இருக்கவும், அது பெய்யாதாயின், விரிந்த நீரையும் இந்த அகன்ற உலகத்தின்கண் உணவு இல்லாதொழியும். அதனால் பசி நோய் துன்புறுத்தும்.

விண் - மழை. உண் இன்று - உணவு இல்லாதொழியும்.

பசி என்பது வயிற்றின் நிலை வேறுபாடு. அப்படியிருக்க மழையில்லாது ஒழியுமானால், உணவு இல்லாதொழியும். பசித்துன்பம் உண்டாகும்.

4.  ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
     வாரி வளங்குன்றிக் கால்.

உழுவோர் மழை என்னும் அரியவரவு பயன்குன்றிய இடத்து ஏர் கொண்டு உழுதலைச் செய்யமாட்டார்.

மழையின்றேல் உழவு நடவாது.

வாரி-தூய தமிழ்ச்சொல். புயல் - புய்த்தல். பிறவினை புய்தல் - தன்வினை.

விரைந்து அடிக்கும் மழையாயினும் அது வேண்டா இடத்துச் சிதறாமல் வேண்டும் வழி வருதலைக் குறிக்க வேண்டும். ஆதலின் புயலென்னும் வாரி என்றார்.

5.  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வுஆய்மற்றுஆங்கே
     எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாது, உலகின் வாழ்வாரைக் கெடச் செய்வதும், அஃதின்றி அவ்விடத்து அவ்வாறு கெட்டார்க்குத் துணையாகி பெய்து, கைதூக்கி விடுவதும் ஆகிய அனைத்தும் மழை.

இயற்கையின் கொடையாகிய மழை மக்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்றோ, நன்மை செய்ய வேண்டும் என்றோ எண்ணிப் பெய்வதும் பெய்யாதொழிவதும் செய்யாது. எனினும் மழையால் மக்கள் அடையும் நலம், தீது கருதி அதைக் கெடுப்பது, எடுப்பது என்கிறார் என்பது இங்கு அறிதல் வேண்டும்.

பேசாத ஒன்றைப் பேசுவது போலவும் வராத ஒன்றை வருவது போலவும் வைத்துச் செய்யுள் செய்வது என்பது கவி மரபு.

6.  விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
     பசும்புல் தலைகாண்பது அரிது.

பசும்புல்லின் தலையையும் மழையின் துளி மண்ணில் வீழ்ந்தாலல்லது வேறு வகையால் அவ்விடத்து காணமுடியாது.

மழையின்றேல் ஓரறிவுயிராகிய புசும்புல்லும் உண்டாதல் இல்லை.

7.  நெடுக்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
     தான்நல்காது ஆகி விடின்.

முகிலானது, மின்னி மழை தராதாகிவிட்டால், நீரான் மிக்கக் கடலும் தனது நீரின் மிகுதித் தன்மை குறையும் மழையின்றேல். பெருங்கடலும் தன் மிகுதித் தன்மை குறையும்.

8.  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
     வறக்குமேல் வான்ஓர்க்கும் ஈண்டு.

மேல்நோக்கி (மழை வரவை) ஆராயும் இவ்வுலக மக்கட்கு, மழை பெய்யா விடில், விழாவுடன் கூடிய பூசனை நடவாது. மழையின்றேல், விழா முதலியவை நடைபெற மாட்டா.

சிறப்போடு பூசனை: ) மன்னன் புதல்வன் வாட்போரிட்டு, மேம்பட்டான். அம்மேம்பாடு கண்டு மக்கள் அன்புற்றார். அதனால் அவனை நாடாளச் செய்தார். அப்போது நடக்கின்றதோர் விழா.

) தமிழ் மறவன் தனி நின்று போராடிப் பருவுடல் நீத்துப் புகழுடன் நிறுவினான். அவனுக்கு நடுகற் சிறப்பும் பூசனையும் செய்ய நாள் குறித்தார்

அஃதோர் சிறப்போடு பூசனை.

9.  தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
     வானம் வழங்காது எனின்.

அகன்ற உலகின்கண், மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் ஆகிய இரண்டு அறங்களும் நிலைபெற மாட்டா. தானம்-இல்லார்க்கு உள்ளார் மனமுவந்து அளிப்பதோர் பண்பு. தவம் - பிறர் பால் எழும் அருள் மிகுதியைக் குறித்தது.

10. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
      வான்இன்று அமையாது ஒழுக்கு.

உலகம் நீர் இன்றி நிலைபெற முடியாது என்றால், ஒழுக்கம் எப்படிப் பட்டவர்க்கும் மழையில்லாமல் நிலைபெறாது. மழையின்றேல் ஒழுக்கம் நிலையாது.

நீத்தார் பெருமை


நீத்தார் பெருமை

துறந்தாரது பெருமை கூறுவது. அறநூல்களை இயற்றியருளும் ஆற்றல் இல்லந்துறந்தார்க்கே அமைவது. இஃது அறம், இஃது மறம் என்று துணிவதோர் துணிவு அவர்க்கே உண்டாதலின்.

அறப்பனுவலின் உயர்வு அதன் ஆசிரியர் ஆற்றலின் உயர்வையே பொறுத்தது. ஆதலின் நீத்தாரது நூற்பெருமை எனப்படாமல் நீத்தார் பெருமை என்றே கூறப்பட்டது.

1.  ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
     வேண்டு(ம்) பனுவல் துணிவு.

உலக மக்களின் ஒழுக்கத்தின் பொருட்டும் மேன்மையின் பொருட்டும் இல்லந் துறந்த தமிழ்ச்சான்றோரின் பெருமை என்னவெனில், வேண்டப் படுகின்ற நூலில், இது அறம், இது மறம் என்று அவர் துணிந்த துணிவே யாகும்.

2.  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
     இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று.

அறப்பனுவல் அருளிச்செய்யும் பொருட்டு இல்லந்துறந்த தமிழ்ச் சான்றோரது பெருமைக்கு நிகர்இவ்வளவு என்று கூறப்புகுந்தால் இன்று வரைக்கும் உலகத்தில் இறந்தாரின் தொகையை கணக்கெடுத்தால் எப்படி முடியாதோ  அப்படிப்போல் முடியாது போகும்.

வள்ளுவர் சொல்லும் துறந்தார், சங்கராச்சாரியும் அல்லர், தருமபுரத்தாரும் அல்லர்.

3.  இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
     பெருமை பிறங்கிற்று உலகு.

அறம், பாவம் என்னும் இரண்டின் கூறுபாடுகளை ஆராய்தறிந்து, இல்லறத்தினின்று, துறவறத்தை மேற்கொண்டோராகிய தமிழ்ச்சான்றோரின் பெருமையே உலகில் மேன்மையுற்றது.

செயற்கருஞ் செயல் என்பது மக்கள் கடைத்தேற ஒருவன் இல்லந் துறத்தல் என்பதேயாகும்.

பாவம் - தூயத் தமிழ்ச்சொல். மனம் தன்னிலை திரியாது நிற்றலே பொருள். இருமை- அறம், பாவம் என்ற இருமைத்தன்மை.

முற்பிறப்புக் கேள்வி எழுப்பப்படுவது தேவையில்லை. பிறந்துள்ளவன் இதற்கு முன் பிறந்தான் என்பது பற்றியும், இனியும் பிறப்பான் என்பது பற்றியும் திருவள்ளுவர் ஒன்றுமே சொன்னதில்லை. அவ்வாறு தோன்றின், அது பரிமேலழகர் வேலைப்பாடு என்க.

இல்லத்தின்று துறவறத்தை அடைந்தவர் என்பது இல்லத் துறவிகள் என்று அறிவித்தற் பொருட்டு.

4.  உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
     வரன்என்னும் வைப்புக்குஓர் வித்து.

அறிவு என்கின்ற தோட்டிக்கருவியால் ஐம்பொறிகளாகிய ஐந்து யானை களையும் அவற்றின் புலன்கள் மேல் செல்ல ஒட்டாமற் காக்கவல்ல இல்லத் துறவியானவன், தான் கண்டவாறு உண்மை பிறரையும் உணரும்படி செய்து, உலகினர்க்கு இதுவே பெறத்தக்க இன்பப் பேறு என்று அருளிச் செய்து வலியுறுத்துவான்.

இல்லத் துறவுடையான், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வுலகம் என்று எண்ணித் தொண்டு செய்வான்.

வரன் என்பதன் பொருள் கைவரல் என்பது ஈண்டு இன்பப்பேறு எனப் பொருள் கூறப்பட்டது. தோட்டி - யானை ஓட்டுவதோர் கருவி.

வரம் -வா என்பதன் அடியாகப் பிறந்த - வரவு. அரிய வரவு என்ற பொருளுடைய தமிழ்க் காரணப்பெயர். ஓர்வித்து -  உணர்வித்து. உணரும்படி செய்து- உணரும்படி செய்தலை முதலில் வைத்தது. விரைவை உணர்த்த இதுதான் பெறத்தக்கது என்பதை உணர்வில் ஏறும்படி விரைந்து செய்த என்றபடி.

5.  ஐந்துவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
     இந்திரனே சாலும் கரி.

பொறிகள் ஐந்தையும் புலன்களின் மேற்செல்ல வொட்டாமல் அடக்கிய தமிழ்த்துறவியினது அறப்பனுவலுக்கு போதிய சான்று, அகன்ற விசும்பில் உள்ளவரின் கோமானாகிய இந்திரனால் செய்யப் பெற்றதென்னும் ஐந்திர நூலா? இல்லை.

தமிழ்நூல்களுக்கு  வடநூல் முதனூலன்று. ஆற்றல் என்றால் ஆற்றலால் விளைந்த அறப்பனுவலை. இந்திரன் என்பது இந்திரனால் செய்யப் பெற்றதாய் உரைக்கும் ஐந்திரம் என்னும் நூல்.

நூல் செய்வார் அந்நூலைச் செய்து செல்வதில் ஏழுவகை முறைகளை மேற்கொள்வார்கள். அவை 1) உடன்படல் 2) மறுத்தல் 3) பிறர்தம் மதம் மேற்கெண்டு களைவே 4) தாஅன் நாட்டித்தனா அது நிறுப்பே 5) இருவர் மாறுகோள் ஒரு தலை துணிபே 6) பிறர் குற்றங் காட்டல் 7) பிறிதொடு படா அமைதன் மதங் கொளலே.

இவற்றில் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே என்பது என்னவெனில் பிறர் கொள்கைகயில் ஒரு புடை மேற்கொண்டு பின்பு அது முழுவதும் மறுத்தொழித்தல் என்க.

வடவர் கதைப்பது போல் இந்திரன் ஒருவன் இருந்தானாயினும் ஆகுக.  அவனும் தேவர் தலைவனே ஆயினும் ஆகுக. ஐந்தவித்த அறத்தமிழர் ஆக்கிய நூலுக்கு ஐந்தவியாது அயன் மாதர் கற்பவித்த அறமிலான் இந்திரனின் ஐந்திரம் முதனூலாகாது என்பார், ‘அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங்கரிஎன்றார்.

கரி - கரு என்ற தமிழ்ச்சொல், கரி மு = கரி எனப் புணர்ந்தது.

6.  செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
     செயற்கரிய செய்கலா தார்.

தமிழ்த் துறவிகள் பிறர் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்வார் கள். அறிவில்லாதவர்கள் செய்வதற்கு அரிய செயல்களை செய்ய மாட்டார்.
பெரியர் என்றது தமிழ்த் துறவிகளை. அவர் செயற்கரிய செய்தலாவது, தன்னல நீத்தலும் பிறர் நலம் காத்தலும். சிறியர் என்றது, அறிவிலாதாரை, வந்தேறிகளை.  உயிர்கள் மாட்டுச் செந்தண்மை இல்லாதவரை. இதுவும் அறப்பனுவல் செய்த துறந்தாரை உட்கொண்டே சொல்லி அவர் அருமை கூறியவாறென்க.

7.  சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
     வகைதெரிவான் கட்டே உலகு.

உலகமானது சுவையும், ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்ற ஐந்து நுண் பொருள்களின் கூறுபாட்டை ஆராய்ந்துணர்ந்தவன் கண்ணதே.

மெய்யுணர்வுடையார்க்கே உலகின் உண்மை காணல் கூடும். பகவன் என்பது மெய்யுணர்வின் முதன்மை என்பது முன்னே விளக்கப்பட்டது. அம் மெய்யுணர்வைப் பெற்றவரே அப்பகவனை அடைந்தவர் என்க. மெய்யுணர்வு பெற்ற நிலையே வீடு என்னும் எண்ணூற் கொள்கை இங்குக் கருதத்தக்கது. எல்லாம் இருபத்து ஐந்து தத்துவங்களில் அடங்கின என எண்ணூல் கூறுகின்ற அவ்விருப்பத்தையே ஆசிரியர் இங்குச் சுவை முதலியவும் அவற்றின் வகையும் எனச் சுருங்கக் கூறினார்.

மதமான பேயாற் பிடிபடாமல் இருக்க அவர்களிடம் அமைந்திருக்கும் பண்பாடுதான் எண்ணூல் கொள்கை முதன்மையினின்று உலகம் தோன்றி யது என்று மதவலையிற் படாத திறம் பண்பாடுதான் மக்கள் அடையத் தக்கது. பெறத்தக்கது அறிவு என்றார்கள். சிவனும் திருமாலும் பிறவும் மக்கள் நல்வாழ்வுக்குத் தேவையில்லை என்றார்கள். உருவ வணக்கம் முட்டாள்தன மானது என்றார்கள். இவ்வாறு மேற்கொண்டு ஒழுகுவதுதான் பண்பாடு. இவ்வாறு கூறுவது தான் கபிலர் எண்ணூல். இதைதான் வடவர் சாங்கியம் என மொழி பெயர்த்துக் கொண்டனர்.

8.  நிறைமொழி மாந்தர்  பெருமை நிலத்து
     மறைமொழி காட்டி விடும்.

உலகின் கண் - உண்மை நிறைந்த நூலைச் செய்த தமிழ்ச் சான்றோரின் பெருமையை பொய்ம்மை யுடைமையால் மறைந்தொழிந்த மொழிகள் எடுத்துக் காட்டிவிடும்.

பொய்ந் நூலுடைய பிறமொழிகளே மெய்ந்நூலருளிய தமிழ்ச்சான்றோரது பெருமையைக் காட்டிவிடும். ஒரு மொழி (பாடை) நிலைத்து வாழ வேண்டு மானால் அம்மொழியில் உண்மை நூற்கள் அமைய வேண்டும். அவ்வுண்மை நூற்களையும் மெய்யுணர்வுடையாராலேயே செய்யமுடியும். அதற்கு நூலாசிரியரின் பெருமையைப் பொய்ம்மை நிறைந்திருந்த காரணத்தால் நூற்களும் ஒழிய, அந்நூற்களையுடைய மொழியும் ஒழிந்து போனதொன்றே எடுத்துக்காட்டிவிடும் என்பார் இவ்வாறு கூறினார்.

நிறைமொழி-உண்மை நிறைந்த மொழி.

மறைமொழி-இதில் வரும் மொழி, மொழி முதலைக் குறித்தது. இதைப் பாடை என்பர் வடக்கர்.

உலகில் என்னாது நிலத்து - மறைந்து வருகின்ற - மறைந்தொழிந்த மொழியைச் சொல்ல வந்தவர், என்றும் நிலைத்து நிற்கின்ற, இடையில் ஒருவரால் தோன்றயதல்லாத உலகத்தையே கூற வேண்டும். அவ்வாறு பொருள்படுவது நிலம். நில் என்ற முதனிலையின் பொருளை நோக்குக.

9.  குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
     கணமேயும் காத்தல் அரிது.

காமம், வெகுளி, மயக்கம் என்று சொல்லப்படுகின்ற மலைத்தலையில் ஏறி அசைவின்றி நின்றாரது அம்முக்குணங்களில் ஒன்றான, வெகுளியை கண் இமைக்கும் நேரங்வட அவ்வெகுளிப்பட்டார்க்குத் தீமை உண்டாகும்படி வைத்துக் காப்பது அரிது.

முக்குணங்களுக்கும் அப்பாற் சென்ற மெய்யுணர்வுடையார் தம்பால் ஒரோ வழித் தோன்றும் வெகுளியை அதே கணத்தில் அடக்கிக் கொள்வார்கள்.
உலகுக்கு அறப்பனுவல் இயற்றுவார் வெகுளி மேற்கொள்ளின் அவ்வெகுளி, அவரிடம் உள்ள எல்லாப் பண்புகளையுமே அழித்துவிடும். ஆகவே வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றார்.

கணம் என்பது கண்இமைக்கும் நேரம்.

மனம் தன்னிலை நிற்றல் பொருள். அது பொறிவழிச் செல்லுங்கால் மனக் கோட்டம் எனப்படும். முக்குண வடிவான மனம் அசைதல் கூடாது. எனவே குணத்தை அசைவில்லா குன்று என்றார்.

10.  அந்தணர் என்போர்அற வோர் மற்று எவ்வுயிர்க்கும்
       செந்தண்மை பூண்டுஒழுக லான்.

எவ்வுயிர்களிடத்தும் செவ்விய அருளைப் பூண்டொழுகும் காரணத்தால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் தமிழ்ச்சான்றோர் துறவறத்தினர்.
தமிழ்ச் சான்றோர் எவ்வுயிர்க்கண் மாட்டும் அருளுடையர் ஆதலின் அவர் இல்லறத் துறவிகளே.

இப்போதுள்ள பார்ப்பனர் தம்மைப் பூசுரர் (உலகின் தேவர்) என்றும் சொல்லிக் கொள்கின்றனர். இது ஏமாற்று. அவ்வாறே தமிழர் சிலரும் சொல்கின்றனர். இது அறிவின்மையின் பயன். அந்தணர் என்பவர் துறந்தோர் என்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவரா அவரா என்பது சரியா? எண்ணுக.

தன்னலத்தின் பொருட்டுப் படிற்றொழுக்கம் பூண்டள்ளாரும் உலக குரு என்று சொல்லிக்கொள்வோரும் துறந்தவர் தாமோ?

கொலை வேள்வி செய்வோனும் அதை ஆதரிப்போனும் துறந்தவனா? அந்தணனா? கோயில் திருவிழாத் தொடங்க எருமை மாட்டை வெட்டச் சொல்லும் பாவி துறந்தவனா? இல்லை என விடுக்க.