Friday, December 27, 2019

மக்கட் பேறு


மக்கட் பேறு

1. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
    மக்கள் பேறுஅல்ல பிற.

ஒருவன் பெறத்தக்க பேறுகள் பலவற்றில் பொருட் பெற்றியறிந்த நன்மக்களைப் பெறுவதல்லது வேறு பேறுகளை யாம் அறியப் போவது மில்லை.

2. எழுபிறப்பும் தீயவை தீண்ட பழிபிறங்காப்
    பண்புடை மக்கள் பெறின்.

பிறர் பழிக்கும் பழி ஏற்படாத நற்பண்புடைய மக்களை ஒருவன் பெறு வானானால், அவனது ஏழு தலைமுறைக் கண்ணும் துன்பம் அணுக மாட்டா.

எழு பிறப்பு -  ஏழு தலைமுறை.

ஒருவன் நன்மக்களைப் பெறுவான் எனில், அவனது ஏழு தலைமுறை யுடையாரும் தீமை காணார் என்பது மட்டும் பொருந்துவதோ எனில் ஆம் பொருந்துவதே. அறிவுடைய மகனுக்கு மகனும் அறிவுடையனானன்றோ! அவனுக்கு மகனும் அவ்வாறே அன்றோ!

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.

அம் மக்களுக்கு செல்வமானது தத்தமது செயலின் தகுதிக்கு ஏற்பச் சேரும். ஆதலின் பெற்றோர் தம் மக்களே  அப்பெற்றோரின் முதுமைக்கு வேண்டிய செல்வம் என்று அறிவுடையோர் கூறுவார்.

தம்தம் வினையான் வரும் என்றது எதற்கு எனில், தந்தை தேடிய செல்வத்தால் வாழ்நாளைக் கடத்த நினையார் நன்மக்கள் தாமே முயன்று தேடுவார் என்றதைக் குறிக்க என்க.

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.

பெற்றோர் தம் குழந்தைகளை, தம் சிறிய கைகளால் துழவப் பெற்ற சோறானது, அமிழ்தைவிட மிக இனிமையுடையது பெற்றோர்க்கு.
சிறிய அளவினதான கை என்றும், அழகிய கை என்றும் எண்ணுமாறு சிறுகை என்றார். மேனின்று அமிழும் உணவு என மழையின் காரணப்பெயர். இனிமை தரும் பொருளுக்கு வழங்குவதாயிற்று. குழைதலின், ‘கூழ்காரணப் பெயர்.

5.  மக்கள் மெய்தீண்டல் உடற்(லுக்)கு இன்பம் மற்றுஅவர்
     சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

பெற்றோரின் உடலுக்கு இன்பமாவது குழந்தைகளின் உடம்பைத் தீண்டுவது. அவர்களின் காதுக்கு இன்பமாவது அக்குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்பது.

தீண்டல், கேட்டல் என்பன தீண்டுதலான இன்பத்திற்கும், கேட்டலாலான இன்பத்திற்கும் ஆனமையால் ஆகுபெயர்கள்.

6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
     மழலைச் சொல் கேளாதவர்.

தம் மக்களின் மழலைச் சொல்லின் இனிமையை நுகர்ந்தில்லாதவர். புல்லாங்குழலின் ஓசை இனியது. யாழின் ஓசை இனிமை உடையது என்று கூறுவார்கள்.

குழல், யாழ், மழலை என்பவை அவற்றின் இனிமையைக் குறித்தன. குழல் என்றதால் துளைக் கருவி அனைத்தும் கொள்க. யாழ் என்றதால் நரம்புக் கருவி அனைத்தும் கொள்க.

துளைக்கருவி, நரம்புக்கருவிகளில் மிகச் சிறந்தன குழலும் யாழும். ஆதலின் அவற்றை மட்டும் குறித்தார். மழலை எழுத்தும் சொற்றிறமும் நிரம்பா மொழி.

7.  தந்தை மகற்காற்று(ம்) நன்றி அவையத்து
    முந்தி யிருப்பச் செயல்.

பெற்றோன், தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றோர் குழுவில் மேம்பட்டு இருக்கும்படி செய்வது.

தம்பொருள் என்ப தம் மக்கள்என்ற முற்செய்யுள் மகன் கல்வி, கேள்வி களில் சிறந்து செயத்தக்க செய்து முதிய தன் தந்தைக்குச் செல்வ மாதலைக் குறித்தது ஆதலின் அச்செய்யுள்.  இச்செய்யுளையடுத்து நிறுத்தற்குரியது. இச் செய்யுள் மகனின் கல்வி கேள்விகளிற் சிறப்புறுதல் பற்றியது ஆதலால் என்க.

8. தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

பெரு வையத்திலுள்ள பெருமை பொருந்திய மக்களெவர்க்கும் (பெற்றோர்) தம்மைவிட தம் பிள்ளைகளின் மேம்பட்டுவரும் அறிவுடைமையானது, அப் பெற்றோர்க்கு இனிதாகும்.

தந்தை மகனைச் சான்றோனாக்குதலை முற்பாட்டில் குறித்த வள்ளுவர், இப்பாட்டில் அவ்வாறு கல்வி வல்ல மக்கள் தம்மினும் அறிவால் உயர்ந்தாராய்த் திகழ்ந்ததால் அதுபற்றி மகிழ்வார்கள் என்று குறித்தார்.
மன்-பெருமை.

9.  ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
     சான்றோன் எனக்கேட்ட தாய்.

தான் ஈன்ற மகனை கல்வி, கேள்வி நிறையப்பெற்றவன் என்று பிறரும் சொல்லுதலைக் கேட்ட தாயானவள், ஆண் குழந்தை பெற்றதாக மருத்துவச்சி யால் சொல்லக் கேட்ட பொழுது உண்டானதைவிட மிகுதியும் மகிழ்ச்சி யடைவாள்.

தன் மகன் சான்றோன் என்பதைத் தாய் அறிந்து வைத்தும் அதுபற்றி மகிழ்ச்சி கொள்ளாள் ஏன்? தன் மகன் சான்றோன் என்பதை அவள் அறிவாள். அதன் மேலும் உலகினர் அவ்வுண்மை அறிந்து அவனது சான்றான்மை அறிந்து கூறியக்கால் அதற்கே மகிழ்வாள் என்பார் இவ்வாறு கூறினார் வள்ளுவர்.

10. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
      என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.

மகனானவன் தன்னைக் கல்வி, கேள்விகள் நிறையச் செய்த தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி என்னெனில், இவனுடைய தந்தை யானவன் இந்த நல்ல மைந்தனைப் பெறவும் இவனைச் சான்றோனாக்கவும் என்ன தவத்தைச் செய்தானோ என்ற சொல்லேயாகும்.

தந்தை தவம் செய்தலாவது அன்பு, அறம் ஒழுக்கங்களில் பொறுப்பேற்றல்.

No comments:

Post a Comment