Friday, December 27, 2019

அன்புடைமை


அன்புடைமை
பிற உயிர்களுடனுள்ள தொடர்பினின்று தோன்றுவதோர் உணர்வுடைமை.
அன்பு உணர்வின் வழியது. உள்ளது சிறத்தல் என்ற கொள்கையால் உணர்வு அன்பு, அன்பே உணர்வு என அறிய வேண்டும். மக்கள் பெறத்தக்க ஒன்று அன்பு.

1.  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
     புன்கணீர் பூசல் தரும்.

ஆர்வத்தால் வெளிப்படுகின்ற புல்லிய கண்ணிரானது, தூற்றிவிடும். ஆதலின், பிற உயிர்மேல் ஏற்படும் தொடர்புணர்ச்சிக்கும் தெரியாது வைத்துச் சாத்தும் தாழ்ப்பாள் உண்டோ?

புன்கணீர் பூசல் தரும் என்பதற்குதம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பங் கண்டுழி அன்புடையார்கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்ற அன்பினை எல்லோரும் அறியத் தூற்றும்என்று பொருள் கூறினார் 

பரிமேலழகர். பிறர் துன்பம் கண்ட இடத்தில் மட்டும் கண்ணீர் வரும் என்பது பொருந்தாது. பிறர் இன்புறுதல் கண்டு இன்புறுதலும் துன்புறுதல் கண்டு துன்புறுதலும் அன்பு என அறிதல் வேண்டும். இன்புறக் கண்டு இன்புறும் போதும் கண்ணீர் வரும் என்பதும் நினைவுகொள்ள வேண்டும்.

2.  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புஉடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர் எவரும் பொருள் முதலியவற்றால் தமக்கே பயன்படுவர். அன்புடையவர் பிறர்க்குப் பொருள் முதலியவற்றால் பயன்படுவது மட்டுமின்றி தம் உடலாலும் பயன்படுவார்.

தமக்கு உரியர் என்றது தம் உடல், பொருள், ஆவி  மூன்றையும் தமக்கே பயன்படுத்துபவர் என்றவாறு இங்கு உடல் ன்பது உடலுழைப்பை பிறர்க்கு பயன்படுத்துவதையும் இவ்வாறு கொள்க.

3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.

மக்களுயிர்க்கு உடம்போடு ஏற்பட்டுள்ள தொடர்பினை, அன்புடன் இயைய வழங்கும் வழக்கம் என்று அறிந்தோர் கூறுவார்கள்.

4.  அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
     நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

தொடர்புணர்ச்சியானது, எல்லா உயிர்களிடத்தும் விருப்பம் உடையனாம் தன்மையை உண்டாக்கும். அவ்விருப்பமுடையனாத் தன்மையானது, தொடர்பு கருதிப் போற்றுதலும் தொடர்பின்மைக் கருதித் தூற்றுதலும் இல்லாதன் அளவிறந்த சிறப்பை உண்டாக்கும். ஆர்வம்எல்லா உயிர்க்கண் மாட்டும் எழும் விருப்பம்.

5. அன்புஉற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புஉற்றார் எய்தும் சிறப்பு.

உலகத்தின்கண் இல்லந்துறந்து மக்கட்குத் தொண்டு செய்தலினால் இன்பம் எய்தியவர் பெறுவதோர் நன்மதிப்பானது. அன்பு உடையாராகி இல்லறத்தோடு பொருந்தியதாலாகிய பயன் என்று அறிவுடையார் கூறுவர்.

மனைவி, மக்கள்பால் உற்ற அன்பு, அருளாக அஃது அனைத்துயிரும் தன்னுயிரென்று எண்ணுவதோர் பண்பாடே. உலக மக்களின் நலன் கருதித் தொண்டு செய்யச் செய்ததன்றோ எனின், அவனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. அந்நன்மதிப்புக்கு அவன் அன்பே காரணம் என்பார் இவ்வாறு கூறினார் என்க.
அஃதேயுமின்றி ஒருவனின் உடல் வீழ்ந்த பின்னரும் மற்றொரு நிலை உண்டென்னும் பிறர் நூற்கொள்கையையும் மறுப்பார் வையகத்து இன்புற்றார் என்றார்.

6.  அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
     மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதார் அறஞ்செய்தற்கு மட்டுந்தான் அன்பானது துணையாகும் என்று கூறுவார்கள். வீரச் செயலுக்கும் அந்த அன்பே துணையாவது தீமை யினின்று மீட்க, அத்தீமையின் மேல் விரைவதோர் வீரத்திற்கும் அன்பு தான் துணை செய்கின்றது.

7.   என்பு இலதனை வெயில்போலக் காயுமே
      அன்பு இலதனை அறம்.

அறமானது, என்பு இல்லாத தசைக் கூட்டை வெயிலானது காய்ந்தால் போல் அன்பு இல்லாத உடம்பைக் காய்ந்து பொசுக்கிப் பயனற்றதாக்கிவிடும்.
என்புள்ள உடம்பை வெயில் காய்ந்து பொசுக்குவது அரிது என்பார் என்பிலதனை வெயில்போல என்றார்.

8.  அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
     வற்றல் மரந்தளிர்த்து அற்று.

மனத்தின்கண், அன்பு இல்லாத உயிரானது, உடம்புடன் கூடி வாழ்வ தானது. வன்னிலத்தின்கண், பட்ட மரம் தளிர்த்தால் அதை ஒக்கும்.

9.  புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
     அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு.

உடம்பின் அடிப்படை உறுப்பாகிய அன்பிலாதவர்க்கு இன்றியமையாமைக் குப்புறம்பான கண் முதலிய உறுப்புகள் எல்லாம் வாழ்க்கைக்கு என்ன உதவியைச் செய்துவிடும்? (செய்யமாட்டா என்றபடி).

மற்றொரு வகையாலும் அன்பினதுயர்வு கூறினார். மற்றைய புறத் துறுப்புகளின் வரிசையிலேயே உயிரையும் வைத்துக் காட்டினார் இச் செய்யுளில். ஊன்றி உணர்க.

10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
      என்புதோல் போர்த்த உடம்பு.

உயிர்நின்ற உடம்பாவது எது எனில், அன்பை முதலாகக் கொண்டு அதன் வழியாக அமைந்தது. அந்தக் காரணப் பொருளாகிய அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகளோ எனில், என்பும் தோலும் போர்த்தவை.

No comments:

Post a Comment