Friday, December 27, 2019

வாழ்க்கைத் துணைநலம்


வாழ்க்கைத் துணைநலம்

முற்கூறிய இல்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளின் நன்மை.

1.  மனைத்தக்க மாண்புடையாள் ஆகித் தற்கொண்டான்
     வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்வாழ்க்கைத் துணைவியாவாள். மனையின்கண்ணதான அறத்திற்கு ஏற்ற நற்பண்புடையவளால், தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவு செய்யும் செட்டு உடையவள்.

மனைக்குத்தக்கஎன்பதுமனைத்தக்கஎன வந்தது.

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித்து ஆயினும் இல்.

இல்லாளிடத்து, மனையறத்துக்கு வேண்டிய நற்பண்பு இல்லாயின், அவ்வில்வாழ்க்கையானது செல்வ முதலியவற்றால் எத்தகைய பெருமை யுடையதாயினும் அனைத்தும் இல்லையாகும். மாட்சிதூய தமிழ்ச்சொல்.

3.  இல்லது என்இல்லவன் மாண்பானால் உள்ளதுஎன்
     இல்லவள் மாணாக் கடை.

இல்லாள் மாண்பு உள்ளவளானால், அக்குடும்பத்தில் இல்லாது என்ன? இல்லாள் மாண்பு இல்லாதவளானால் அக்குடும்பத்தில் இருப்பது என்பது எது? (ஒன்றும் இல்லை என்றபடி).

4.  பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
     திண்மையுண் டாகப் பெறின்.

கற்பு என்பதோர் அசையாத் தன்மை அடையப் பெற்றால், பெண்ணைவிட பெருத்த பெரும்பேறு வேறு என்ன இருக்க முடியும்? (இல்லை என்றபடி).
கற்புஎன்பது பொருள் ஊட்டமுள்ள ஒரு தமிழ்ச்சொல். ‘கல்என்ற முதனிலையும்புஎன்ற பண்புப் பெயர் இறுதி நிலையும் உடையது. கல்லின் தன்மை என்பது அதன் நேர் பொருள்.‘கல்லின் தன்மையாவதுஉலகம் வியக்குமாறு போரில் திறங்காட்டி இறந்த மறவன் பெயர் பொறித்தும், உலகினர்க்கு நன்னெறி காட்டிச் சென்ற தமிழ்ச் சான்றோர் பெயர் பொறித்தும், தன் வாழ்க்கைத் துணைவனோடு ஒன்றிய உள்ளமானது, அசையாத் தன்மைப் பெற்று அரிது செய்த மகளிர் பெயர் பொறித்தும் கல் நடுவார்கள் அன்றோ!
அக் கல், அருஞ்செயலுக்கு அடிப்படையான பெரும் பண்புகளை நினைவு படுத்தும் அன்றோ? எனவே தக்காரின் பெரும் பண்பே கற்பு என்று அறிதல் வேண்டும்.

5.  தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
     பெய்யயனப் பெய்யு மழை.

தெய்வங்களைத் தொழமாட்டாள். கணவனைத் தொழுதபடியே துயில் விட்டெழுவாள். அவள் அக்கொழுநனுக்கு பெய் என்று எண்ணிய அளவில் பெய்தால் ஒத்த பயன் மழை.

பெய்யயனப் பெய்யும் மழை என்றது, அளவறிந்து பெய்வதோர் பயன் மழையை.

ஞாலம் விரும்பிய வண்ணம் பெய்யும் கால மழை போல், காதலன் விரும்பிய போது அவன் பெறும் அளவு இன்பம் அளிப்பவள் என்று காதல் இன்பத்தை விளக்கினார்.

பன்னாட்கள் விண்ணின்று பொய்ப்பதும் உண்டு. அந்நாட்களிலெல்லாம் கற்புடைய பெண்டிர் இல்லாதொழிந்தார் என்பதா?

மழை இயற்கையின் கொடை. அது மக்கட்குக் கட்டுப்பட்டது அன்று. அஃதேயும் அன்றி வந்து அளவின் மிக்குப் பொழிந்து கெடுக்கும் மழையைத்  தடுப்பாரும் இல்லை என்பதை அறிந்து வைக்க.

6.  தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
     சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்பினின்று அசையாமல் தன்னைக் காத்தும் தன்னைக் கொண்ட வனாகிய கணவனைக் காத்தும் பெருமைமிக்க தன் குடிக்குரிய புகழைக் காத்தும் ஆகிய இவற்றில் சிறிதும் மனத்தளர்ச்சியில்லாதவள் எவளோ அவளே மனைவி.
பண்பு, குடிப்பிறப்பு நிலைமை முதலியவற்றில் தனக்கு ஒப்புடையானைக் கண்டு, காதலால் மனம் ஒன்றுபடு மட்டுமே தன் கற்பைத் தான் காத்துக் கொள்பவள் பெண்.  அஃதேயுமின்றி, கொண்ட தலைவனைப் பிரிந்த வழியும் கற்பில் தன்னைக் காத்துக் கொள்பவள் பெண் என்பார் தற்காத்து என்றார்.

7.  சிறைகாக்கும் காப்புஎவன் செய்யு மகளிர்
     நிறைகாக்கும் காப்பே தலை.

தமிழ் மகளிர் தம் நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துவதோர் நிறையை காப்பதோர் காவலே உலகில் சிறந்தது. பிற வந்தேறிகள் தம் மனைவியரைச் சிறை வைத்தலால் காக்கும் காப்பு என்ன பயனைச் செய்யும்? (பயன்படாது என்றபடி).

8. பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
     புத்தேளிர் வாழும் உலகு.

மகளிர், தன் உள்ளத்தைக் கவர்ந்த துணைவனின் உள்ளத்தைக் கவர்ந்தா ராயின், பெருஞ் சிறப்பினையுடைய தெய்வங்கள் வாழுவதெனச் சொல்லப் படும் உலகைப் பெறுவார்கள்.

புத்தேளிர் வாழும் உலகு என்பது புகழ், செல்வம் முதலிய பயன்படு பொருள்களும் கண்ணையும் மனத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆகிய கூட்டத்தை.

9.  புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
      ஏறுபோல் பீடு நடை.

இகழ்வாராகிய பகைவர் எதிரில். அரிமா ஏற்றைப் போல் நிமிர்ந்த நடை. புகழை விரும்பிய மனையாள் இல்லாதார்க்கு இருக்க முடியாது.
இல்லாள் ஒருத்தி புகழை விரும்புவதாவது: ஆதி மந்தி, ஓளவை போன்ற பெண் மக்களையும் செங்குட்டுவன், வள்ளுவன் போன்ற ஆண் மக்களையும் உலகுக்கு என்று தர விரும்புவது முதலியவை.

10. மங்கல(ம்) என்ப மனைமாட்சி மற்றுஅதன்
      நன்கல(ம்) நன்மக்கட் பேறு.

மனையர்களின் நற்பண்பு, நற்செயல்களை, குடும்பத்திற்கமைந்த இயற்கை அழகு என்பர் அறிவுடையோர். அதற்கு மேல் அமைந்த நல்லணி யாவது நல்ல மக்களைப் பெறுவது என்பர் அறிவுடையோர்.

இயற்கை அழகிருக்கவும், செயற்கை யழகாய் அணியும் இல்லாள் விரும்புமோ எனின், அவள் மக்களை விரும்புதல் போல் விரும்பும்.

No comments:

Post a Comment