Friday, December 27, 2019

உலகின் தோற்றம்


உலகின் தோற்றம்

உலகாகிய இடம் உலகத்து உயிர்கள் - அவற்றின் நிலை ஆகியவை தோன்றும் முறையாம்

1.  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
     பகவன் முதற்றே உலகு.

உலகும் உயிர்களும் மற்றுள்ளவைகளும் ஆதி என்பதினின்று தோன்றி யவை. ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே.
ஆதி-வடசொல் அன்று. தூய தமிழ்ச்சொல்லே. அஃது ஆதல் எனப்படும் தொழிற் பெயர்.

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். எல்லாம் ஆதி என்றதால் உலகம், ஆதி () முதன்மையின்று தோன்றியது என்றாயிற்று. எல்லாம் ஆதி என்றது என்னை யயனில், காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் ஆனதோர் முறை கொண்டு.

பகவன்- வடசொல்லன்று. பகல் எனப் பொருள்படும் பகவு, ஆண்பால் இறுதி நிலை பெற்றது. பகல்+ அறிவு. பகவன் ஆண்பாற் சொல்லப்படினும் பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க.

பெறத்தக்கது அறிவு.  கடவுள்-கடந்தது. அறிவுக்கு எட்டாதது என்று அதன் பொருளை நோக்கின், எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்? இதனால்தான் கடவுள் என்ற பெயரையே வள்ளுவர் தம்நூலில் எடுத்தாளாது விட்டடார்.

அன்றியும்முதல்ஒளவரை பனிரெண்டு உயிர் எழுத்துக்கள் உள்ளன. அதில் ஒரு எழுத்திலிருந்து மற்றவை தோன்றின் என்பது எப்படி பொருந்தும்?

2.  கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
     நல்தாள் தொழாஅர் எனின்.

மெய்யுணர்வை உண்டாக்காத கல்வியால் பயனில்லை. வாலறிவை - வாலறிவன் என்றதற்கேற்பத் தத்துவத்தை நற்றாள் என்றார்.
வாலறிவன் - தூய அறிவுடையவனாகிய பகவன். பகவன் - பெறத்தக்க மெய்யுணர்வை உடையவன். நற்றாள் - தாள், அடி, தன்மை, தத்துவம். ஒரு பொருள் சொற்கள்.

நற்றாள் தொழுதல் - தத்துவ உணர்வைப் பெறுதல்.

தன்மை என்பது தத்துவத்தின் பொருள். வாலறிவன் நற்றாள் என்றால், அறிவன் நல்ல தன்மை என்பதுதான் பொருள். பெறத்தக்கது அறிவின் தன்மை என்றாது அறிவுக்குரிய குணம், செயல்களை.

3.  மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
      நிலம்மிசை நீடு வாழ்வார்.

மலர் - உலகம். உலகை மலர் என்றும், மயில் என்றும், ஆதியை அரும்பு என்றும், மயிலின் முட்டை என்றும் எண்ணூல் கூறும். இதை உட்கொண்டே உலகை மலர் என்றார் வள்ளுவர்.

மாண்அடி - பெருமை பொருந்திய அடிகளை. நிலமிசை -இவ்வுலகின்கண்.
மெய்யுணர்வு பெற்றார் தாம் விரும்பும் காலம் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து இன்புறுவர். ‘மாணடி சேர்ந்தார்என்பது அறிவு பெற்றவர்கள் என்று பொருள்.
அரும்பு- ஆதி. அதாவது முதன்மைக்குப் பெயர். மலர் - உலகின் பெயர். உலகிலுள்ள உயிர்களுக்கும் பெயர் அறிவு. உயிர்களிடமெல்லாம் பரவி யிருப்பது தெரிந்தது. அறிவில்லாத இடத்தில் உயிரில்லை அன்றோ? ஆதலால் இவ்வாறு மெய்பொருள் கூறப்பட்டது.

4.  வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
     யாண்டும் இடும்பை இல.

மக்களிடமிருந்து ஒன்றை விரும்புதலும், இவர் இன்னது செய்திலரே என அவர்களை வெறுத்தலும் இல்லாத மெய்யுணர்வுப் பெற்றோருக்கு யாண்டும் துன்பம் ஏற்படுவதில்லை. இக்குறட்பாவால், உருவ வணக்கத்தையும் அவ்வுருவங்களுக்குக் கோயில் கட்டுவது, உணவு, உடை, இழை தருவது முதலிய மடமை வழக்கத்தையும் எதிர்த்தார் வள்ளுவர்.

இடும்பை எங்கெங்கு இருந்து உண்டாகும் என்னில், இயற்கையின் மோதுதலாலும் ஒழுக்கக் கேட்டினாலும் தன் தந்தை தாய்மாரின் ஒழுக்கக் கேட்டினாலும் வரும். எவ்வகைத் துன்பமும் அறிவு பெற்றானை அண்டுவ தில்லை என்பதும் இங்கு அறிந்து வைக்க.

5.  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
     பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் - எங்கணும் இறைந்தவனாகிய பகவன்.

மனம் தன்னிலையில் நிற்பதே பொருள். அதாவது அடையத்தக்கது. அது வெளியிற் குதிப்பது. அதாவது பொருள்களின் மேல் பற்றுக்கொண்டு திரிவது துன்பத்தையே செய்யும். அப்படிச் செல்வது என்பது நல்ல செயல் செய்வ தாகவும் சொல்லப்படலாம். தீய செயல் செய்வதாகவும் சொல்லப்படலாம்.
தீய செயல் செய்வதாகவும் சொல்லப்படலாம். இரண்டும் தீமையே பயக்கும். அறிவை அதாவது மெய்யுணர்வை அடைந்தவர்களிடம் இந்த இரண்டு வைக செயல்களும் இரா. அவர்களின் மனம் தன்னிலையிலேயே இருக்கும்.

உணர்வுக்கும் அறிவுக்கும் வேறுபாடு உண்டு. உணர்வு மன அறவு. அது நுண்பொருள் பற்றியது. அறிவு புலனறிவு. அது பருப்பொருள் பற்றியது. இங்கு காட்டிய உணர்வை வள்ளுவர் மெய்யுணர்வு என்றார்.

6.  பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீர் ஒழுக்கம்
     நெறிநின்றார் நீடு வாழ்வார்.

பொறிவாயில் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளை வாயிலாக உடைய சுவை. ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தும் பற்றி வரும் ஐந்து அவாவினையும் (ஆசையினையும்) நீக்கிய வனாகிய பகவனைப் பற்றிய மெய்யான ஒழுக்க நெறிக்கண் வழுவாமல் நின்றவர்கள் எந்நாளும் இன்புற்று வாழ்வார்கள்.

அவா நீங்கிய நிலையானது மெய்யுணர்வு. அவ்வுணர்வை அடைவதற்கு மெய்யான ஒழுக்க நெறி நிற்றல் வேண்டும். நீடு வாழ்தலாவது, அருள் மிகுதியால் தன்னலம் நீக்கி மக்கட்குச் செய்யும் தொண்டு நிறைவுறு மட்டும் துன்பமின்றி வாழ்ந்திருத்தல்.

ஐந்தவித்தல் - பற்றின்றி வாழ்தல்.

7.  தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லாள்
     மனக்கவலை மாற்றல் அரிது.

உவமை சொல்ல முடியாத மெய்யுணர்வு பெற்றார்க்கன்றி மனக்கவலை தீராது. ஒரு பொருளுக்கு உவமையாக அப்பொருளினும் சிறந்த ஒன்றையே சொல்ல வேண்டும். மெய்யுணர்விலும் சிறந்தது இல்லையாயின் தனக் குவமை இல்லாதான் என்றார். அரிது இன்மை பொருட்டு.

தனக்குவமை இல்லாத அறிவு மெய்யுணர்வு என்பதை பாவாணர் அவ்வாறு கூறுவதை மரபு என்பார். தனக்குவமை இல்லாதான் ஒருவனின் உருவம் ஒன்று இருக்கவே முடியாது. எப்போது ஒன்று உருவம் பெற்றதோ அப்போது அது உவமை சொல்லப்படும் பொருளாகிவிடும். மெய்யுணர்வுக்கு அப்படியில்லை. அது உவமை சொல்ல முடியாது.

8.  அறம்ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
      பிறஆழி நீந்தல் அரிது.

மெய்யுணர்வு அறக்கடல். அதனைப் பற்றி துன்பக் கடலைக் கடத்தல் வேண்டும்.

அந்தணன் என்ற பெயர் மெய்யுணர்வுக்கே உயர்ந்த பொருளுக்கே பொருந்தும்.
அறவாழி- இன்பக்கடல். அந்தணன் - அருளுடைய மெய்யுணர்வு.

9.  கோண்இல் பொறியின் குணம்குலஏ எண்குணத்தான்
     தாளை வணங்காத் தலை.

எண் குணம் என்பது வினைத் தொகை நிலைத் தொடர். எண்ணும், எண்ணிய, எண்ணுகின்ற என முக்காலத்தும் விரிவது. எண் என்பது எண் குணம். எட்டு குணமன்று.

மக்கள் சிறப்பென எண்ணுகின்ற குணங்களையுடைய பகவனின் அடியை  வணங்காவிடத்து, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றில் தத்தமக் கேற்ற புலன்களைக் கொள்ள முடியாத மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளைப் போல ஒருவனுக்கமைந்த மன அறிவாகிய உணர்வும் பயன் படல் இல்லை.

எப்பொருட்கும் மேற்பொருள் என்று மெய்யுணர்வை உணராவிடத்து மற்ற ஐயுணர்வு இருந்தும் பலனில்லை.

10.  பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
       இறைவன் அடிசேரா தார்.

இறைவன்- இறைந்தவன் எவ்வுயிரினும் பரவியவன். அதாவது அறிவு, இறைவன் என்று மன்னனுக்கும் சொல்வதுண்டு. தன் அதிகாரம் மக்களிடம் இறைந்து பரவி நிற்றலால்.

எங்கும் நிறைந்துள்ள பகவனின் அடியை எக்காலத்தும் எண்ணாதார் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரை சேர மாட்டார்கள். ஈண்டு பிறவி என்றது மாண்டு. பிறப்பதை அன்று. நொடிதோறும் மிகப் பலவாக வேறுபட்டுவரும் மனக்குறிப்பையே.

No comments:

Post a Comment