Friday, December 27, 2019

அறன் வலியுறுத்தல்


அறன் வலியுறுத்தல்

அறம். மிக ஆற்றல் உடையது. அதை மக்கள் மேற்கொண்டே ஒழுகுதல் வேண்டும் என வற்புறுத்தினாராயிற்று.

1.  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
     ஆக்கம் எவன்ஓ உயிர்க்கு.

மெய்யுணர்வையும் கல்விச் செல்வம், பொருட்செல்வம் எனப்படுவதோர் செல்வத்தையும் நல்கும் அறத்தைவிட மக்களுக்கு உயிர்நிலை வேறு ஏது?

அறமுடையான் அனைத்தும் உடையான் சிறப்பு-பொதுமையற்றது. அஃது மெய்யுணர்ந்த நிலை. ஆதலின் சிறப்பு மெய்யுணர்வு எனப் பொருள் கொள்ளப்பட்டது.

ஆக்கம் - செல்வம் ஒருவனுக்கு மேன்மை அளிப்பதால் உயர்நிலை எனப் பொருள் கூறப்பட்டது.

அறம் - மாசற்ற மனத்தால் நினைப்பனவும், நினைப்பின் பயனாக வரும் செயல்களும் அறம். அறச்செயல்கள் என்று அறிக.

2.  அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
     மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

அறஞ் செய்வதைவிட, ஒருவனுக்கு மேன்மை நிலையும் உண்டாதல் கிடையாது. அந்த அறம் செய்வதை மடமையால் மறந்துவிடுவதைவிட கேடான நிலை கிடையாது.

அறஞ்செய மறப்பதைவிட கேடான நிலை இருக்க முடியாது.

மறதி - அறம் செய்ய அட்டியில்லை. ஆனால் செய்யாதிருந்துவிட்டதற்கு மறதிதான் காரணம் என்பவன் ஊரை ஏமாற்றுகிறவனே. தூய மனமானது தூய செயலைச் செய்ய மறந்ததற்குக் காரணம் என்னவாயிருக்க முடியும்? அவன் உள்ளம், கேடுற்றிருக்க வேண்டும். இருக்கவே கெட்ட செயலை, பாவச் செயலைச் செய்திருக்க வேண்டும். அதனால் விளைவது கேடே.

3.  ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
     செல்லும் வாய்எல்லாம் செயல்.

மனஞ்செல்லுமிடத்தும், சொற்செல்லுமிடத்தும், மெய் செல்லுமிடத்தும் ஆகிய எல்லாவிடத்திலும் அவர்கட்கு இயன்றவகையில் இடையறாது அறச் செயல்களைச் செய்க.

கால்வாய் வெட்டிக் கங்கையைக் கொணர்வான் ஒருவன் செயலும் அறச்செயலே. இல்லார்க்கு ஒருபிடிச் சோறிடுவான் ஒருவன் செயலும் அறச்செயலே. இவற்றில் எவனுக்கு எது இயலுமோ அதைச் செய்க என்பார் ஒல்லும் வகையான் என்றார். பெரிதோ சிறிதோ இடையறாது செய்க

இன்றேல், அவ்வழிப்படும் மனம் என்பார் ஓவாதே என்றார்.

கோயிலுக்குப் போகாதிருப்பதும் சிற்றிலக்கணம் படிப்பதுமாகிய இரண்டும் அறமே.

4.   மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
      ஆகுல(ம்) நீர பிற.

மனதில் மாசு இல்லாதவன் ஆகுவது எந்த அளவோ அந்த அளவுக்கு அவன் அறமுடையவன். மாசு உளன் ஆகுதல் எல்லாம். பொய் விளம்பரத்தன்மை உடையவை.

முழுமை அறம் என்பது மெய்யுணர்வு பெற்ற நிலை. அஃது வீட்டு நிலை எனப்படும். முழுமையுற்ற அறத்தையே இங்கு மாசுஇலன் ஆதல் அனைத்து என்றுரைத்தார்.

5.  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்ற(து) அறம்.

பிறர் ஆக்கங் கண்டு பொறாமையும், ஐம்புலன்கள் மேலும் செல்லுகின்ற அவாவும், அவாக் காரணமாக எழும் சினமும், இனிமையில்லாத கடுஞ் சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நான்கு குற்றங்களையும் நீக்கி நடந்தது எதுவோ அது அறம்.

அழுக்காறு முதலில் நான்கும் குற்றமாக வைத்து மற்றப் பண்புகளின் வழியே தோன்றுவது அறம் என்று விரித்துரைக்க.

6.  அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
      பொன்றும்கால் பொன்றாத் துணை.

உடல்அழியும் காலத்திற் பார்த்துக் கொள்வோம் என்று எண்ணாமல் இடையறாது என்றும் அறத்தைச் செய்துகொண்டிருக்க. ஏனெனில் அவ்வற மானது உடல் அழியும் நேரத்தில் மற்றோர் அழியா உடம்பு.

சாதலின் இன்னாது இல்லை என்றார் இவ்வாசிரியர். அச்சாக்காட்டுத் துன்பம் ஏற்படும்போது அதை நீக்குவது மருத்துவனாலும் ஆகாது. ஆயின் அவன் தேடியுள்ள புகழே நீக்கவல்லது. அஃதேயுமின்றி அப்புகழ் அத் துன்பத்தை இன்பமாக்கிவிடும். இவ்வுடம்பு செல்லினும் செல்லுக. இதோ நிலைபெறுகின்றது புகழுடம்பு என்றெண்ணி அமைதியடைவான் என்பார். இவ்வாறு கூறினார் வள்ளுவர்.

பொன்றுதல் - கெடுதல்.

எது கெடுதல்? உடம்புதானே? உயிரா கெடும்? அல்லது பொன்றுதல் எனின் உடம்பைவிட்டு உயிர் நீங்குதல் என்று பொருள் கொள்ளுதல் வேண்டுமெனில் அவ்வாறு நலிந்து பொருள் கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது?

7.  அறத்துஆறு இதுவென வேண்டா சிவிகை
     பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கை சுமந்து போவானும், ஏறிச்செல்வானுமாகிய இருவரினது நடுவில் நின்று, அறத்தினது பயன் இதுதான் என்று பணிகளில் உயர்வு தாழ்வு காண்பது விரும்பத்தக்கதன்று.

செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்ற உண்மையை இக்குறட்பாவில் அன்றி வேறு எங்கும் வள்ளுவர் கூறவில்லை.

8.  வீழ்நாள் படாமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
     வாழ்நாள் வழியடைக்கும் கல்.

(அறம்) செய்யாமற் கழிந்த நாள் இல்லாமல் அறத்தை செய்து வருவானானால், அந்த அறமானது ஒருவனின் வாழ்நாட்கள் அழிந்தோடாமல் சாகாமையைத் தேக்குவதோர் அடைகல்.

இடைவிடாது அறம் செய்துகொண்டிருப்பின் ஒருவனின் வாழ்நாள் வீணிற் கழியாது.

9.  அறத்தான் வருவதே இன்ப(ம்)மற்ற எல்லாம்
     புறத்த புகழும் இல.

நன்று ஆற்றுவார் ஆற்றலின் காரணமாக வருவதே இன்பமாகும். அறமல்லாத வழியில் செய்யப்படும் செயல் அனைத்தும் இன்பத்தின் புறமாகிய துன்பத்தின்பாற்பட்டவை. அச்செயல்களால் புகழும் ஏற்படா இன்பம் என்பது அறத்தால் வருவது.

இன்பம் என்பது காமநுகர்ச்சி என்றார் பரிமேலழகர். காமநுகர்ச்சி மட்டும் இன்பம் அன்று. ஈர்த்துவத்தலும் இன்பம். மனமகிழ்ச்சியே இன்பம். ஒழுக்கத் தால் பாற்பட்ட மனையாளோடு கூடிச் செய்யும் அறத்தாலும், இல்லம் துறந்து செய்யும் அறத்தாலும் இன்பம் வரும்.

10. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
       உயற்பாலது ஓரும் பழி.

ஒருவனுக்குச் செய்யத்தக்கது, ஆராய்ந்து செய்யப்படும் அறமேயாகும். நீக்கத்தக்கது அவன் அறிந்த பழி.

தெரிந்து செய்யத்தக்கது அறம். தெரிந்து நீக்கத்தக்கது பழி.

ஓர்தல் - ஆராய்தல்.

முடிந்த நான்கதிகாரங்களால் உலகின் தோற்றத்தையே கூறினார். என்னை? ஆதியினின்று உலகு விரிந்து உணர்வை நாடி, மழையால் நிலை நின்று, சான்றோரால் காப்பாற்றத் தோன்றிய தோற்றத்தைக் கூறியதன்றி வேறின்றாதலின்.

No comments:

Post a Comment