நீத்தார் பெருமை
துறந்தாரது பெருமை கூறுவது. அறநூல்களை இயற்றியருளும் ஆற்றல் இல்லந்துறந்தார்க்கே அமைவது. இஃது அறம், இஃது மறம் என்று துணிவதோர் துணிவு அவர்க்கே உண்டாதலின்.
அறப்பனுவலின் உயர்வு அதன் ஆசிரியர் ஆற்றலின் உயர்வையே பொறுத்தது. ஆதலின் நீத்தாரது நூற்பெருமை எனப்படாமல் நீத்தார் பெருமை என்றே கூறப்பட்டது.
1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டு(ம்) பனுவல் துணிவு.
உலக மக்களின் ஒழுக்கத்தின் பொருட்டும் மேன்மையின் பொருட்டும் இல்லந் துறந்த தமிழ்ச்சான்றோரின் பெருமை என்னவெனில், வேண்டப் படுகின்ற நூலில், இது அறம், இது மறம் என்று அவர் துணிந்த துணிவே யாகும்.
2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று.
அறப்பனுவல் அருளிச்செய்யும் பொருட்டு இல்லந்துறந்த தமிழ்ச் சான்றோரது பெருமைக்கு நிகர்இவ்வளவு என்று கூறப்புகுந்தால் இன்று வரைக்கும் உலகத்தில் இறந்தாரின் தொகையை கணக்கெடுத்தால் எப்படி முடியாதோ
அப்படிப்போல் முடியாது போகும்.
வள்ளுவர் சொல்லும் துறந்தார், சங்கராச்சாரியும் அல்லர், தருமபுரத்தாரும் அல்லர்.
3. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
அறம், பாவம் என்னும் இரண்டின் கூறுபாடுகளை ஆராய்தறிந்து, இல்லறத்தினின்று, துறவறத்தை மேற்கொண்டோராகிய தமிழ்ச்சான்றோரின் பெருமையே உலகில் மேன்மையுற்றது.
செயற்கருஞ் செயல் என்பது மக்கள் கடைத்தேற ஒருவன் இல்லந் துறத்தல் என்பதேயாகும்.
பாவம் - தூயத் தமிழ்ச்சொல். மனம் தன்னிலை திரியாது நிற்றலே பொருள். இருமை- அறம், பாவம் என்ற இருமைத்தன்மை.
முற்பிறப்புக் கேள்வி எழுப்பப்படுவது தேவையில்லை. பிறந்துள்ளவன் இதற்கு முன் பிறந்தான் என்பது பற்றியும், இனியும் பிறப்பான் என்பது பற்றியும் திருவள்ளுவர் ஒன்றுமே சொன்னதில்லை. அவ்வாறு தோன்றின், அது பரிமேலழகர் வேலைப்பாடு என்க.
இல்லத்தின்று துறவறத்தை அடைந்தவர் என்பது இல்லத் துறவிகள் என்று அறிவித்தற் பொருட்டு.
4. உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்குஓர் வித்து.
அறிவு என்கின்ற தோட்டிக்கருவியால் ஐம்பொறிகளாகிய ஐந்து யானை களையும் அவற்றின் புலன்கள் மேல் செல்ல ஒட்டாமற் காக்கவல்ல இல்லத் துறவியானவன், தான் கண்டவாறு உண்மை பிறரையும் உணரும்படி செய்து, உலகினர்க்கு இதுவே பெறத்தக்க இன்பப் பேறு என்று அருளிச் செய்து வலியுறுத்துவான்.
இல்லத் துறவுடையான், தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வுலகம் என்று எண்ணித் தொண்டு செய்வான்.
வரன் என்பதன் பொருள் கைவரல் என்பது ஈண்டு இன்பப்பேறு எனப் பொருள் கூறப்பட்டது. தோட்டி - யானை ஓட்டுவதோர் கருவி.
வரம் -வா என்பதன் அடியாகப் பிறந்த - வரவு. அரிய வரவு என்ற பொருளுடைய தமிழ்க் காரணப்பெயர். ஓர்வித்து -
உணர்வித்து. உணரும்படி செய்து- உணரும்படி செய்தலை முதலில் வைத்தது. விரைவை உணர்த்த இதுதான் பெறத்தக்கது என்பதை உணர்வில் ஏறும்படி விரைந்து செய்த என்றபடி.
5. ஐந்துவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
பொறிகள் ஐந்தையும் புலன்களின் மேற்செல்ல வொட்டாமல் அடக்கிய தமிழ்த்துறவியினது அறப்பனுவலுக்கு போதிய சான்று, அகன்ற விசும்பில் உள்ளவரின் கோமானாகிய இந்திரனால் செய்யப் பெற்றதென்னும் ஐந்திர நூலா? இல்லை.
தமிழ்நூல்களுக்கு வடநூல் முதனூலன்று. ஆற்றல் என்றால் ஆற்றலால் விளைந்த அறப்பனுவலை. இந்திரன் என்பது இந்திரனால் செய்யப் பெற்றதாய் உரைக்கும் ஐந்திரம் என்னும் நூல்.
நூல் செய்வார் அந்நூலைச் செய்து செல்வதில் ஏழுவகை முறைகளை மேற்கொள்வார்கள். அவை 1) உடன்படல் 2) மறுத்தல் 3) பிறர்தம் மதம் மேற்கெண்டு களைவே 4) தாஅன் நாட்டித்தனா அது நிறுப்பே 5) இருவர் மாறுகோள் ஒரு தலை துணிபே 6) பிறர் குற்றங் காட்டல் 7) பிறிதொடு படா அமைதன் மதங் கொளலே.
இவற்றில் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே என்பது என்னவெனில் பிறர் கொள்கைகயில் ஒரு புடை மேற்கொண்டு பின்பு அது முழுவதும் மறுத்தொழித்தல் என்க.
வடவர் கதைப்பது போல் இந்திரன் ஒருவன் இருந்தானாயினும் ஆகுக.
அவனும் தேவர் தலைவனே ஆயினும் ஆகுக. ஐந்தவித்த அறத்தமிழர் ஆக்கிய நூலுக்கு ஐந்தவியாது அயன் மாதர் கற்பவித்த அறமிலான் இந்திரனின் ஐந்திரம் முதனூலாகாது என்பார், ‘அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங்கரி’ என்றார்.
கரி - கரு என்ற தமிழ்ச்சொல், கரி மு இ = கரி எனப் புணர்ந்தது.
6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
தமிழ்த் துறவிகள் பிறர் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்வார் கள். அறிவில்லாதவர்கள் செய்வதற்கு அரிய செயல்களை செய்ய மாட்டார்.
பெரியர் என்றது தமிழ்த் துறவிகளை. அவர் செயற்கரிய செய்தலாவது, தன்னல நீத்தலும் பிறர் நலம் காத்தலும். சிறியர் என்றது, அறிவிலாதாரை, வந்தேறிகளை.
உயிர்கள் மாட்டுச் செந்தண்மை இல்லாதவரை. இதுவும் அறப்பனுவல் செய்த துறந்தாரை உட்கொண்டே சொல்லி அவர் அருமை கூறியவாறென்க.
7. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
உலகமானது சுவையும், ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்ற ஐந்து நுண் பொருள்களின் கூறுபாட்டை ஆராய்ந்துணர்ந்தவன் கண்ணதே.
மெய்யுணர்வுடையார்க்கே உலகின் உண்மை காணல் கூடும். பகவன் என்பது மெய்யுணர்வின் முதன்மை என்பது முன்னே விளக்கப்பட்டது. அம் மெய்யுணர்வைப் பெற்றவரே அப்பகவனை அடைந்தவர் என்க. மெய்யுணர்வு பெற்ற நிலையே வீடு என்னும் எண்ணூற் கொள்கை இங்குக் கருதத்தக்கது. எல்லாம் இருபத்து ஐந்து தத்துவங்களில் அடங்கின என எண்ணூல் கூறுகின்ற அவ்விருப்பத்தையே ஆசிரியர் இங்குச் சுவை முதலியவும் அவற்றின் வகையும் எனச் சுருங்கக் கூறினார்.
மதமான பேயாற் பிடிபடாமல் இருக்க அவர்களிடம் அமைந்திருக்கும் பண்பாடுதான் எண்ணூல் கொள்கை முதன்மையினின்று உலகம் தோன்றி யது என்று மதவலையிற் படாத திறம் பண்பாடுதான் மக்கள் அடையத் தக்கது. பெறத்தக்கது அறிவு என்றார்கள். சிவனும் திருமாலும் பிறவும் மக்கள் நல்வாழ்வுக்குத் தேவையில்லை என்றார்கள். உருவ வணக்கம் முட்டாள்தன மானது என்றார்கள். இவ்வாறு மேற்கொண்டு ஒழுகுவதுதான் பண்பாடு. இவ்வாறு கூறுவது தான் கபிலர் எண்ணூல். இதைதான் வடவர் சாங்கியம் என மொழி பெயர்த்துக் கொண்டனர்.
8. நிறைமொழி மாந்தர்
பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
உலகின் கண் - உண்மை நிறைந்த நூலைச் செய்த தமிழ்ச் சான்றோரின் பெருமையை பொய்ம்மை யுடைமையால் மறைந்தொழிந்த மொழிகள் எடுத்துக் காட்டிவிடும்.
பொய்ந் நூலுடைய பிறமொழிகளே மெய்ந்நூலருளிய தமிழ்ச்சான்றோரது பெருமையைக் காட்டிவிடும். ஒரு மொழி (பாடை) நிலைத்து வாழ வேண்டு மானால் அம்மொழியில் உண்மை நூற்கள் அமைய வேண்டும். அவ்வுண்மை நூற்களையும் மெய்யுணர்வுடையாராலேயே செய்யமுடியும். அதற்கு நூலாசிரியரின் பெருமையைப் பொய்ம்மை நிறைந்திருந்த காரணத்தால் நூற்களும் ஒழிய, அந்நூற்களையுடைய மொழியும் ஒழிந்து போனதொன்றே எடுத்துக்காட்டிவிடும் என்பார் இவ்வாறு கூறினார்.
நிறைமொழி-உண்மை நிறைந்த மொழி.
மறைமொழி-இதில் வரும் மொழி, மொழி முதலைக் குறித்தது. இதைப் பாடை என்பர் வடக்கர்.
உலகில் என்னாது நிலத்து - மறைந்து வருகின்ற - மறைந்தொழிந்த மொழியைச் சொல்ல வந்தவர், என்றும் நிலைத்து நிற்கின்ற, இடையில் ஒருவரால் தோன்றயதல்லாத உலகத்தையே கூற வேண்டும். அவ்வாறு பொருள்படுவது நிலம். நில் என்ற முதனிலையின் பொருளை நோக்குக.
9. குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
காமம், வெகுளி, மயக்கம் என்று சொல்லப்படுகின்ற மலைத்தலையில் ஏறி அசைவின்றி நின்றாரது அம்முக்குணங்களில் ஒன்றான, வெகுளியை கண் இமைக்கும் நேரங்வட அவ்வெகுளிப்பட்டார்க்குத் தீமை உண்டாகும்படி வைத்துக் காப்பது அரிது.
முக்குணங்களுக்கும் அப்பாற் சென்ற மெய்யுணர்வுடையார் தம்பால் ஒரோ வழித் தோன்றும் வெகுளியை அதே கணத்தில் அடக்கிக் கொள்வார்கள்.
உலகுக்கு அறப்பனுவல் இயற்றுவார் வெகுளி மேற்கொள்ளின் அவ்வெகுளி, அவரிடம் உள்ள எல்லாப் பண்புகளையுமே அழித்துவிடும். ஆகவே வெகுளி கணமேயும் காத்தல் அரிது என்றார்.
கணம் என்பது கண்இமைக்கும் நேரம்.
மனம் தன்னிலை நிற்றல் பொருள். அது பொறிவழிச் செல்லுங்கால் மனக் கோட்டம் எனப்படும். முக்குண வடிவான மனம் அசைதல் கூடாது. எனவே குணத்தை அசைவில்லா குன்று என்றார்.
10. அந்தணர் என்போர்அற வோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
எவ்வுயிர்களிடத்தும் செவ்விய அருளைப் பூண்டொழுகும் காரணத்தால் அந்தணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் தமிழ்ச்சான்றோர் துறவறத்தினர்.
தமிழ்ச் சான்றோர் எவ்வுயிர்க்கண் மாட்டும் அருளுடையர் ஆதலின் அவர் இல்லறத் துறவிகளே.
இப்போதுள்ள பார்ப்பனர் தம்மைப் பூசுரர் (உலகின் தேவர்) என்றும் சொல்லிக் கொள்கின்றனர். இது ஏமாற்று. அவ்வாறே தமிழர் சிலரும் சொல்கின்றனர். இது அறிவின்மையின் பயன். அந்தணர் என்பவர் துறந்தோர் என்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவரா அவரா என்பது சரியா? எண்ணுக.
தன்னலத்தின் பொருட்டுப் படிற்றொழுக்கம் பூண்டள்ளாரும் உலக குரு என்று சொல்லிக்கொள்வோரும் துறந்தவர் தாமோ?
கொலை வேள்வி செய்வோனும் அதை ஆதரிப்போனும் துறந்தவனா? அந்தணனா? கோயில் திருவிழாத் தொடங்க எருமை மாட்டை வெட்டச் சொல்லும் பாவி துறந்தவனா? இல்லை என விடுக்க.
No comments:
Post a Comment