இல்வாழ்க்கை
மனையாளோடு கூடி வாழ்தலின் சிறப்பு.
வாழ்வார்க்கு இன்றியமையா அறம் நிறைந்த பனுவலைத் ‘துறந்தார்’ இயற்றியருளியதாலும் மழையினாலும், மெய்யுணர்வு பெறுவதோர் வேட்கையாலும் நிலை பெற்றதான இவ்வுலகின் தோற்றத்தைக் கூறி அருளிய வள்ளுவர், சமயக்கணக்கர் மதி கூறாது அறிவுடையார் இன்னது செய்வார், இன்னது விலக்குவார் என எடுத்துக்காட்டுதல் வாயிலாக இது பொருள் கூறுவார் எனக் கூறுவாராகி முதற்கண் இல்வாழ்க்கையைக் கூறியருளினார்.
1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றின் நின்ற துணை.
மனையாளோடு கூடி வாழுகின்றவன் என்று சொல்லப்பெறுகின்றவன், இயற்கைத் தொடர்புடைய அன்னை, தந்தை, ஆசிரியன் ஆகிய முத்திறத்தார்க் கும், இந்த முத்திறத்தார்க்கும் ஆன நல்லொழுக்க நெறிக்கு ஏற்ப நின்ற துணையாவான்.
இல்வாழ்வான் அன்னைக்கு துணையாவது என்பது பிணி, மூப்பு, சாக்காடு நேராமல் உண்டி, உடை, உறையுள் உதவுவதோடு தானும் நன்னெறிப் பற்றையே ஒழுகுதல்.
தந்தைக்குத் துணையாவது என்பது உண்டி முதலிய உதவுவதோடு, ‘இவன் தந்தை என்னோற்றான் கொல்’ எனும் சொல்லையும் ஏற்படுத்துதல்.
ஆசிரியருக்குத் துணையாவது என்பது அவனையும் தந்தை என எண்ணி, அவர்க்கு உண்டி முதலியவற்றில் குறைபாடு இன்றித் துணை செய்வதும் அவன்பால் என்றும் நன்றியுடையனாதலுமாம்.
2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்
இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
இல்வாழ்வான் என்று சொல்லப் பெறுவோன், இல்லம் துறந்தார்க்கும், வறியவர்க்கும், செத்தவர்க்கும் துணையாம்.
இறந்தார்க்கு இல்வாழ்வான் துணை செய்தலாவது வையம் உய்ய அவர் வகுத்த முறைகளை அவர் இறந்த பின் இவ்வுலகிற்கு பரப்புதலும் இயற்றிய நன்னூற்களை அவர் இறந்தபின் முடித்துப் பயன்படுத்தலும், பிறர் நலம் கருதித் தொடங்கிய பெருஞ்செயல். அரும்பொருள்களை அவர் இறந்தபின் நிறைவு செய்து உலகுக்குப் பயன்படுத்தலும் இறந்தார்க்குச் சேர வேண்டியப் புகழை அவர்க்குச் சேர்ப்பதே இருப்பார் கடன் என்க.
3. தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை.
கடல் கோட்பட்ட குமரிநாட்டிலிருந்து புகலென வந்தோரும், தெய்வங்களும், விருந்தினரும், சுற்றத்தாரும், தானும் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாது காத்தல் தலையாய அறமாகும்.
தென்புலத்தார் தொல்காப்பியப் பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் உரை நவிலுங்கால் குமரி என்ற சொல்லுக்குக் குமரியாறு என்று பொருள் கூறினார்.
தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்துக் குமரி என்பது ஓர் ஆறாக இருந்திருக்க வேண்டும் என்றே ஆராய்ந்து உணரப்பட்டதாகும்.
அடியார்க்கு நல்லார் குமரிக்குத் தெற்கே ஒரு காலத்திலிருந்தொழிந்த நாற்பத்தொன்பது நாடுகளை கூறுகின்றார்.
4. பழிஅஞ்சி பாத்துஊன் உடைத்துஆயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
ஒருவனின் இல்வாழ்க்கையானது, பழிக்கு அஞ்சி பகுத்து உண்டலைக் கொண்டதாயிருப்பின், எக்காலத்தும் அவன் வழி வருவோர் உயர்ந்து நிற்றலன்றிக் கெடுதல் இல்லை.
பாத்தூண் என்றது, தன் குடும்பத்துக்குள்ளானதைவிட மிஞ்சிய செல் வத்தை அரசர்க்கும் அற நிலையங்களுக்கும் ஆம் வகையில் பிரித்துக் கொடுத்தலை.
பகுத்துண்ணலில் பழியஞ்சுவதாவது, தான்பெற்ற செல்வம் தன் நாட்டுக்கே ஆகும்படி பகுதல்.
5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
காதலிருவர் கருத்தொருமித்து வாழ்வதோர் இல்வாழ்க்கையானது, அன்பையும் அறத்தையும் கொண்டதாயிருந்தால் அவ்வாறு கொண்ட அது, அவ்வில்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.
அன்புக்கும் அறத்திற்கும் அப்பாலாக இன்பம் பயப்பதொன்றில்லை என்பார் பண்பும் பயனும் அது என்றார்.
இச்செய்யுளால் உருவ வணக்கம், சமயக் கணக்கர் கூறும் தம்மில் மாறுபட்ட பலவகை முயற்சிகள் மூட வழக்கங்கள் அனைத்தையும் மறுத்தார்.
6. அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றில் புறத்துஆற்றில்
போஓய்ப் பெறுவது எவன்.
மனையாளோடு கூடிச்செய்யும் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்தினால், பிறவழியிற் சென்று பெறத்தக்க பயன் எது? (ஒன்றும் இல்லை என்றபடி).
7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இல்லாளேடு கூடிவாழும் வாழ்க்கையினின்று அதற்குரிய அற முயற்சி யோடு வாழ்கின்றவன் என்று சொல்லப்பெறுவான், பிறவழியில் முயல்வார் எல்லாரினும் மேலானவன்.
8. ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
தவஞ்செய்வாரைத் தவநெறியே ஒழுகச் செய்து, அறம் பிழைக்காத இல்வாழ்க்கையானது, அத்தவம் செய்வாரின் ஆற்றலைவிடப் பேராற்றல் உடையதாகும்.
9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதுஇல்ஆயின் நன்று.
மனையாளோடு கூடிநடத்தும் வாழ்க்கையே அறம் எனப்பட்டது. அறமே நிறைந்த இல்வாழ்க்கையும் பிறனால் பழிக்கப்படுவது இல்லாதொழிந்தால் அறம் எனப்படும்.
துறவறத்தின் வேருக்கு இல்லறமே காரணம் ஆதலின் அறன் என்றார். அதுவேயுமின்றி இல்லாளோடு கூடி நடத்தும் வாழ்க்கை வகையில் அறமே நிறைந்திருத்தலின், இல்வாழ்க்கையே அறம் என்றார் என்பதும் அறிதல் வேண்டும்.
துறவறத்தைச் சிறப்பிலதாகக் காண்பார் வள்ளுவர். ஏன்? இல்லறத் துறவை நீக்கி, உள்ளத் துறவினை ஆராயின், அவ்வுள்ளத் துறவால் உலகுக்குப் பயன் எதுவுமில்லாது ஓழிதலால் என்க. மேலும் துறந்தான் என்பான் இல்வாழ்வானையே எதிர்பார்த்தவனாகிறான். அதனாலும் என்க.
10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உலகத்தில் வாழும் முறைப்படி வாழும் ஒருவன் வானுலகில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுவான்.
எத்தனை சமயங்கள்! அவையும் ஒன்றினோடு ஒன்று ஒவ்வாதவை. அச்சமயங்கள் மக்களை மேற்கொள்ளப் பணிக்கும் முறைகள் எத்தனை! அவைகளும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாதவை.
அம்முறைகளை மேற்கொண்டு மக்கள்படும் இன்னல்கள் எத்தனை! மான இழப்பு, மதியிழப்பு, செல்வ இழப்பு, செயலிழப்பு.
இத்தனை பாட்டுக்கும் பயனுண்டு எனும் உறுதியேனும் உண்டா? அதுவும் இல்லை.
வள்ளுவர், மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்ட தெய்வ நம்பிக்கையை எதிர்க்க எண்ணவில்லை. தெய்வ வரிசையில் தெய்வமாகச் சேர வேண்டிய தற்கே வழிசொல்வார் போல் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முறையைக் காட்டினார்.
No comments:
Post a Comment